மகளிர் வங்கிக் கணக்கில் ஒரே நேரத்தில் ரூ.5,000 செலுத்தப்பட்டதை வரவேற்கிறோம் – தொல்.திருமாவளவன்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒரே நேரத்தில் ரூ.5,000 செலுத்தப்பட்டுள்ளதற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பு

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளி பெண்களின் வங்கிக் கணக்குகளில் ஒரே நேரத்தில் ரூ.5,000 செலுத்தப்பட்டுள்ளதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனர்–தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான உரிமைத் தொகை ரூ.3,000 மற்றும் கோடை கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்காக ரூ.2,000 என மொத்தம் ரூ.5,000 வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு மகளிருக்கு மனநிறைவு அளிப்பதோடு, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாகவும், இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு விசிக சார்பில் பாராட்டுகளும் நன்றியும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதற்குப் பிறகு, சுமார் ஒன்றரை கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருவதாகவும், இந்தத் திட்டம் ஆரம்பத்தில் சாத்தியமில்லை என விமர்சிக்கப்பட்ட நிலையில், நடைமுறையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், பின்னர் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாகவும், அசாம், டெல்லி, ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இதேபோன்ற மகளிர் உதவித் தொகைத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மகளிர் உரிமைத் தொகையைப் பெறும் பெண்கள், அந்தத் தொகையை சிறு கடன்கள் அடைப்பதற்கும், குழந்தைகளின் கல்வி மற்றும் முதியோரின் மருத்துவச் செலவுகளுக்கும் பயன்படுத்தி வருவதாகவும், குறிப்பாக கிராமப்புறப் பெண்களுக்கு இது பொருளாதாரத் தற்சார்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தத் திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 74 சதவீதம் பேர் கிராமப்புற மகளிர் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், இந்தத் திட்டத்தைத் தடை செய்ய பாஜக–அதிமுக கூட்டணி முயற்சி செய்ததாக குற்றம்சாட்டிய திருமாவளவன், இதனை முன்கூட்டியே உணர்ந்த தமிழக முதல்வர் மூன்று மாதங்களுக்கான தொகையையும், கூடுதல் உதவித் தொகையையும் ஒரே நேரத்தில் வழங்க உத்தரவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், எதிர்வரும் திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது பெண்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

2021 தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமின்றி, அளிக்கப்படாத வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றி வருவதாக சுட்டிக்காட்டிய அவர், காலை உணவுத் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்கள் இதற்குச் சான்று என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு சமூக நீதி அரசாகவும், மக்கள் நல அரசாகவும் செயல்பட்டு, பொருளாதாரம், கல்வி மற்றும் சுகாதாரக் கட்டமைப்பில் இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளதாகக் கூறியுள்ள திருமாவளவன், வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைய மக்களிடம் ஆதரவு கோரியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *