‘மக்களுக்கான அரசு’ என்றால் இதுதானா? திருச்சி சம்பவம் குறித்து விஜய் கடும் கண்டனம்

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் ஆண் குழந்தை மர்ம நபரால் கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள், அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

திருச்சி அரசு பொது மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன ஆண் குழந்தை, தடுப்பூசி போடுவதாக ஆசைவார்த்தை கூறிய மர்ம நபரால் கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திகள், அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்துவதாக தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், “மக்களுக்கான அரசு” எனக் கூறிக்கொள்ளும் ஆட்சியில், அரசு மருத்துவமனையிலேயே ஒரு தாயின் மடியிலிருந்து குழந்தை கடத்தப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத அவல நிலை எனக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சம்பவங்கள், ஏழை மற்றும் எளிய மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாகத் தலையிட்டு, கடத்தப்பட்ட குழந்தையை விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குழந்தையைப் பிரிந்து தவிக்கும் பெற்றோருக்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்றும் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த குழந்தைக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது எந்தவித தயவு தாட்சண்யமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், குறிப்பாகப் பிரசவ வார்டுகளில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். பயோமெட்ரிக் முறை, அடையாள அட்டை சரிபார்ப்பு போன்ற நவீன தொழில்நுட்பங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *